ஹத்ராஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை.. காயத்தால் இறந்தார்.. உ.பி. போலீஸ் பகீர் !

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, நாக்கை அறுத்து, முதுகு எலும்பு, கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என தடயவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் மேலும் பேசுகையில், அந்த பெண் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாக கூறியுள்ளார். பெண்ணிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் விந்தணுக்கள் இல்லை என்று தடயவியல் அறிக்கையில் தெரியவந்ததாக கூறினார்.
அந்தப் பெண்ணும் தனது வாக்குமூலத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து எதுவும் கூறவில்லை என்றும், தாம் அடிக்கப்பட்டதாக மட்டும்தான் கூறினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையல், சமூக நல்லிணக்கத்தை குலைத்து, இன வன்முறையை தூண்ட சிலர் முயன்றதாக குற்றம்சாட்டிய அவர், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மருத்துவ அறிக்கை வருவதற்கு முன்பே அரசையும், காவல்துறையையும் குறை கூறியது மோசமானது என்றும் அவ்வாறு செய்தவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் கூறினார்.
ஹத்தராஸில் கடந்த 14ஆம் தேதி நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது உடல் அவசர அவசரமாக இரவோடு இரவாக உறவினர்கள் இல்லாமல் காவல்துறையினரே தகனம் செய்தனர்.
காவல்துறை தரப்பில் பாலியல் வன்கொடுமை இல்லை என கூறப்பட்ட நிலையில், உடல் உடனடியாக எரிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவத்தில் யாரையோ காப்பாற்ற அரசும், காவல்துறையும் இது போன்று செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
newstm.in