H1-B விசா கட்டண குழப்பங்கள் : ஒரு முறை மட்டுமே கட்டணம்..?
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஹெச் 1 பி விசா கட்டண உயர்வு ( ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சம்) நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த கட்டண உயர்வு பற்றி பல்வேறு சந்தேகங்கள்,முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்த விசாவை வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த கட்டண உயர்வு என்பது புதிய விசா கோரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கட்டண உயர்வு மற்றும் அதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் அவசர தொலைபேசி உதவி எண்களை அறிவித்துள்ளது, இந்த விபரத்தை இந்திய தூதரகம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது; அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் +1-202-550-9931 என்ற செல்போன் எண்ணை (மற்றும் WhatsApp) அழைக்கலாம். உடனடி அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் மட்டுமே இந்த எண்ணைப் பயன்படுத்த வேண்டும், வழக்கமான தூதரக விசாரணைகளுக்கு அழைக்க வேண்டாம்.இவ்வாறு இந்திய தூதரகம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.முன்னதாக அமெரிக்கா திரும்பும் இந்தியர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அனைத்து தூதரகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டண விதிமுறைகள் குறித்து அமெரிக்க அதிபர் மாளிகையின் ஊடகத் துறை செயலர் கரோலின் லீவிட் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஏற்கெனவே பெற்றவர்களுக்கு விலக்கு எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை. அதேபோல, வெளிநாட்டு ஊழியர்கள் தாய்நாட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பினாலும் கட்டண உயர்வை செலுத்த அவசியம் இல்லை. புதிதாக எச்1பி விசா கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு பொருந்தும். தற்போதைய எச்1பி விசாவை பழைய கட்டண விகிதத்திலேயே புதுப்பித்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.