ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்..!
சென்னையில் இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர் வெங்கடேஸ்வரன், ஜி.வி. பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
1988 - 1992 வரையிலான காலக்கட்டத்தில் ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம், நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 10 கோடியே 54 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளது.போலி ஆவணங்கள் மூலம் இந்நிறுவனம் கடன் பெற்றிருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரன், வங்கி அதிகாரிகள் என 9 பேர் மீது 1996ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், கடந்த 2003ஆம் ஆண்டு வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். வங்கி அதிகாரிகள் 3 பேர் காலமானதை அடுத்து, அவர்கள் 4 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மற்றவர்கள் மீதான வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி வடிவேலு, வங்கியின் கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன், சுவாமிநாதன், தனிநபர் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவர்களுக்கு மொத்தமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.