1. Home
  2. தமிழ்நாடு

பெயர்ச்சி அடைந்தார் குருபகவான் : ஆலங்குடி, குருவித்துறையில் சிறப்பு வழிபாடு

1

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் உள்ளது ஆலங்குடி திருத்தலம். இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில்  மிகவும்  பிரசித்தி பெற்ற குருபரிகார  ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் வருடந்தோறும் குரு பெயர்ச்சி விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் குருபகவான் நேற்று மே 1-ம் தேதி மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். 

குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு புனித நீர் நிரப்பப்பட்ட 108 கலசங்களுக்கு சிறப்பு யாகமும், அதை தொடர்ந்து குருபகவானுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. 

அதை தொடர்ந்து குரு பெயர்ச்சி நாளான நேற்று அதிகாலை சிறப்பு குரு பரிகார ஹோம், ஆராதனைகள் நடைபெற்றது. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசத்துடன் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்து சென்றனர். மாலை குரு பெயர்ச்சியின் போது குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து ராசிக்காரர்களும் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

பக்தர்களின் நலன் கருதி  திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

முன்னதாக குருபெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா கடந்த 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. குரு பெயர்ச்சிக்கு பின் மீண்டும் வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை இரண்டாவது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைய துறை துணை ஆணையர், கோவில் தக்கார் ராமு, கோவில் செயல் அலுவலர் சூரியநாராயணன், கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

இதே போல் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சித்திரரத வல்லப பெருமாளை நோக்கி   தவக்கோலத்தில் சுயம்புவாக காட்சி தரும் குருபகவான் கோவிலிலும் குரு பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  

Trending News

Latest News

You May Like