கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கு... கைதான வடமாநில கொடூரனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி..!
கும்மிடிப்பூண்டி தாலுகா, ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 12ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை போலீசார் கடந்த 25-ஆம் தேதி கைது செய்தனர்.
அதன் பின்னர் 26-ம் தேதி திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது ராஜு பிஸ்வகர்மாவை ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராஜு பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரியிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து இது குறித்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது ராஜு பிஸ்வகர்மாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் உண்மையான குற்றவாளி அல்ல என்றும், உண்மை குற்றவாளியை கைது செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் செந்தில்குமார் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, விசாரணையை தொடர்ந்து நீதிபதி உமா மகேஸ்வரி 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வடமாநில இளைஞரை வேனில் ஏற்ற போலீசார் கொண்டு வந்த போது, அதிமுக வழக்கறிஞர் செந்தில்குமார் தாக்க முற்பட்டதால் போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். இதனிடையே நீதிமன்றத்திற்கு பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்த பெண்கள் வடமாநில இளைஞரை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.