குஜராத் தீ விபத்து : பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது.
இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதில் 9 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து பேசிய ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவ், "சனிக்கிழமை பிற்பகலில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எங்களால் முடிந்த அளவுக்கு சீக்கிரமாக தீயை கட்டுப்படுத்தினோம். ஆனால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியவில்லை. உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார்.