தொர்மாக்கோல் பயன்படுத்த கூடாது... விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!
விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கின்றன.
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் http://www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.
சிலைகளை கரைக்க வேண்டிய பகுதிகள்
அதன்படி, சென்னை மாவட்டத்தில், சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் உள்ள பாப்புலர் எடைமேடையின் பின்புறம், திருவொற்றியூரில் உள்ள யுனிவர்சல் கார்போரேண்டம் தொழிற்சாலைக்கு பின்னால், பல்கலை நகர் நீலாங்கரை, ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் ஆகிய ஆறு இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வழிமுறைகள்
- களி மண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, மூலப்பொருள்களால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
- சிலைகளுக்கு ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
- ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
- சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
- சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
- சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.
விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.