இன்று முதல் ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமல்: மக்கள் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு!
12% வரிசையில் இருந்த 99% பொருட்கள் 5% வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.
28% வரிசையில் இருந்த 90% பொருட்கள் 18% வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.
எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?
இந்த புதிய வரி விகிதங்கள் நாளை முதல் அமலுக்கு வருவதால் பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.
உணவுப் பொருட்கள்: ரெடிமேட் பரோட்டா, சப்பாத்திக்கு வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது (ரெடிமேட் பரோட்டா 18% இலிருந்து சப்பாத்திக்கு இருந்த 5% வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது). இதன் விலை ₹0.50 முதல் ₹5 வரை குறையும்.
சாக்லேட்டுகள், பாஸ்தா, நூடுல்ஸ், பன்னீர், நெய், வெண்ணெய், உலர் பழங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றின் வரி 5% அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலைகள் குறையும். உதாரணத்துக்கு, ஒரு கிலோ நெய் அல்லது வெண்ணெய் ₹600 ஆக இருந்தால், அது ₹40 குறைந்து ₹560 ஆகிறது.
வீட்டு உபயோகப் பொருட்கள்: ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், 32 இன்ச்களுக்கு மேற்பட்ட டி.வி., டிஷ் வாஷர் போன்ற பொருட்களுக்கு வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சராசரியாக அவற்றின் விலையில் 10% குறையும். சமையல், சாப்பாட்டுப் பாத்திரங்கள், குக்கர், தட்டுகள், கரண்டிகள் போன்ற பெரும்பாலான பொருட்களின் வரி 12% அல்லது 18% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள்: ஆடம்பர கார்களைத் தவிர, 1,200 சி.சி.க்கு கீழ் உள்ள கார்களின் வரி 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.65,000 முதல் ரூ.3.5 லட்சம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது. 350 சி.சி.க்கு கீழ் உள்ள மோட்டார் சைக்கிள்களின் வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டதால், அதன் விலை ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை குறையும். மின்சார வாகனங்களுக்கு இருந்த 5% வரி தொடர்வதால், அதில் எந்த மாற்றமும் இல்லை.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள்: மருத்துவ உபகரணங்கள், தெர்மாமீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், சில மருந்துகள் மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றின் வரி 18% மற்றும் 28% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மூக்குக் கண்ணாடிகள் மற்றும் லென்சுகள் மீது இருந்த 28% வரி 5% ஆகக் குறைக்கப்பட்டதால் ரூ.1,000 விலை உள்ள கண்ணாடி ரூ.750 ஆகக் குறையலாம்.
மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள்: பென்சில், ரப்பர் மற்றும் மேப்களுக்கு வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பொருட்கள்: சோப்புகள், டூத் பேஸ்ட், ஷாம்பு, தலைக்கு தேய்க்கும் எண்ணெய் போன்ற பொருட்களுக்கு வரி 18% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதால், ரூ.6.50 முதல் ரூ.40 வரை விலை குறையும்.
கட்டுமானப் பொருட்கள்: சிமெண்ட்டின் வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டதால், ஒரு மூட்டைக்கு ரூ.40 வரை குறைகிறது. கம்பிகளுக்கு இருந்த 18% வரி தொடர்வதால் அதன் விலையில் மாற்றம் இல்லை.
விலை உயர வாய்ப்புள்ள பொருட்கள்
துணிமணிகள்: ரூ.2,500க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு வரி 5% இலிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குல்ட் மெத்தைகள்: இந்த பொருட்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
ஆடம்பரப் பொருட்கள்: சிகரெட், புகையிலை மற்றும் ஆடம்பர கார்களுக்கு வரி 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகள் அதிகரிக்கும்.
பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி
விலை குறைப்புக்கு மாறாக, அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். இதற்காக, மத்திய அரசு சிறப்புப் பிரிவுகளைத் தொடங்கியுள்ளது.
இணையதளம்: https://consumerhelpline.gov.in
தேசிய நுகர்வோர் உதவி எண்கள்: 1800-11-4000 மற்றும் 1915
எஸ்.எம்.எஸ்: 14404 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.