பச்சை துரோகி.. சீமான் உனக்கு எதிராக எங்கள் படை நிற்கும் - திருமுருகன் காந்தி..!
தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற புதிய அணியின் தொடக்க நிகழ்ச்சியில் திருமுருகன் காந்தி பேசியதாவது:-
ரஜினிகாந்திடம் போய் நிற்கிறார் சீமான். உங்களுக்கு வெட்கமா இல்லையா? இதையே எத்தனை தடவை கேட்பது? வெட்கமா இல்லையா என்ற வார்த்தையே சீமானுக்காகவே எழுதி வைக்கனும். திராவிடம் என்றால் கோபமாய் வெடிக்கக் கூடிய சீமான் சங்கி என்று சொன்னால் சிரித்து புன்னகையோடு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறார். உங்கள் முகத்தை நீங்களே வெளிப்படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். இது அயோக்கியத்தனமா இல்லையா? ஈழத்துக்காக எதுவுமே செய்யவில்லை. ஆனால் சிங்களத்துடன் கை கோர்த்துக் கொண்டிருக்கிற சங்கிகளை ‘நண்பன்’ என்று சொல்லக் கூடிய ஒருவரை வீழ்த்துவதுதான் தமிழ்த் தேசியத்தின் முதல் பணியாக இருக்க வேண்டும்.
பச்சை துரோகி.. சீமான் உனக்கு எதிராக எங்கள் படை நிற்கும். திமுகவுக்கு எதிரான மாற்று அரசியலை செய்ய வேண்டும் என்றால் சீமான் போன்ற புல்லுருவிகளை தூக்கி வீசினால்தான் செய்ய முடியும். எங்களுக்கு திமுகவுக்கு மாற்று தேவைதான். அந்த இடத்தில் சீமான் கிடையாது. சீமானுக்கு முதுகெலும்பும் இல்லை.. துணிச்சலும் இல்லை. உனக்கு சினிமா படமும் எடுக்க தெரியலை.. அரசியலும் தெரியலை.. வரலாறும் தெரியலை.. புரட்சி செய்யவும் தெரியலை.. கோழைகளுக்கு எதற்கு அரசியல் கட்சி?
தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்துக்கு ஆபத்து அதிகமாவதால் தமிழ்த் தேசியக் கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியம் என்பதை ஒரு ஓட்டு அரசியலுக்குள் நிறுத்தி வைத்துள்ளார் சீமான். அரசியல் சுயலநலத்துக்காக தமிழ்த் தேசியம் இங்கே மடைமாற்றப்படுகிறது. இதனால் இனிமேலும் பொறுக்க முடியாது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டணியை அறிவித்துள்ளோம். மேடைபோட்டு மேடைக்கு மேடை தமிழ்த் தேசியம் என பேசுவதாலேயே தமிழ்த் தேசியம் சாத்தியமாகப் போவது இல்லை. தமிழ்த் தேசியம் என்பதற்கு கோட்பாடுகள் உண்டு; உயிர் நீத்தவர்கள் உண்டு; சிறைக்கு சென்றவர்கள் உண்டு; அந்தக் கோட்பாட்டை நிறைவேற்ற களத்தில் நிற்பவர்கள் உண்டு.
2009-ம் ஆண்டு ஈழப் பிரச்சனையில் கோபத்துடன் கிளம்பிய இளைஞர்களை எல்லாம் திராவிடத்துக்கு எதிராக நிறுத்தி பிளவுவாத அரசியலை செய்கிறவர் சீமான். தமிழ்த் தேசியத்தையும் சீமான் விளக்கவில்லை; தமிழ்த் தேசியத்துக்கான திராவிடத்தின் பங்களிப்பையும் சீமான் சொல்லவில்லை. சீமானுக்கு தமிழ்த் தேசியம் என்ன என்பதே தெரியாது. இவ்வாறு திருமுகன் காந்தி பேசினார்.