பெரும் சோகம்.. பட்டாசு வெடித்து சிதறியதில் இளைஞர் உயிரிழப்பு !!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மா காலனியில் தங்க பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று வழக்கம்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். காலையில் இருந்தே தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், பகல் 12 மணிக்கு எதிர்பாராத வகையில் அந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட ஒரு அறையில் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது.
பட்டாசு வெடித்து சிதறியதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. அதில் அமர்ந்து பணியாற்றி வந்த பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த அரவிந்தன் (22) என்ற இளைஞர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். மற்ற தொழிலாளர்கள் சிதறி ஓடினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் கட்டிட இடிபாடிற்குள் சிக்கி கருகிய நிலையில் கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது பட்டாசு இதயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வு காரணமான வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதனிடையே, வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த துயரமான செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக கூறிய முதலமைச்சர், வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
newstm.in