தன் தாத்தாவிற்கு பாரத ரத்னா விருது அறிவித்ததை அடுத்து பாஜக கட்சிக்கு தாவிய பேரன்..!
நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங்கின் மகனுமான ஜெயந்த் சவுத்ரி ராஷ்ட்ரீய லோக்தள கட்சியின் தலைவராக உள்ளார். இக்கட்சி இன்டியா கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சில தொகுதிகளில் இக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளது.
இவர் சமீபத்தில் பாஜக தலைவர் ஜெபி நட்டாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அக்கட்சி பாஜக கூட்டணியில் இணையலாம் எனக் கூறப்பட்டது. நேற்று, முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அவரது பேரனான ஜெயந்த் சவுத்ரி வரவேற்பு தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக கூட்டணியை ஜெயந்த் சவுத்ரி உறுதி செய்துள்ளார். கூட்டணி வாய்ப்பை எப்படி தவிர்க்க முடியும் எனக்கூறிய அவர், பிரதமர் மோடியின் கொள்கையை நாட்டில் வேறு எந்த கட்சியும் இதுவரை செயல்படுத்தியது கிடையாது எனக் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் உ.பி.,யில் ஆர்எல்டி 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.