அரசின் புதிய திட்டம் : இனி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு DIGIPIN..!
ஆதார் கார்டில் இருக்கும் ஒவ்வொரு முகவரிக்கும் ஒரு டிஜிட்டல் ஐடி வழங்கப்பட உள்ளது. இதனால் வீடுகள் மற்றும் இடங்களை மிகவும் துல்லியமாகவும், வேகமாகவும் கண்டறியலாம். குறிப்பாக அரசு சேவைகள் அல்லது அரசாங்க சலுகைகளை மிகவும் துல்லியமாக வழங்க இவை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு பயனரின் முகவரியையும் டிஜிட்டல் பப்ளிக் இன்பிராஸ்டிரக்சர் மேட்ரிக்ஸ்-இன் கீழ் கொண்டுவர அரசு விரும்புகிறது. தற்போது நாட்டில் முகவரி விவரங்களை நிர்வகிப்பதற்கு எந்தவித அமைப்பும் சரியாக இயங்கவில்லை. இதனால் பல நிறுவனங்கள் பயனர்களின் முகவரி விபரங்களை சேகரித்து கேட்காமலேயே அவற்றை விற்பனை செய்து பணம் ஈட்டுகின்றனர். எனவே மக்களின் முகவரி தகவல்கள் அவர்களின் ஒப்புதலோடு பிறருக்கு பகிரப்படுவதை உறுதி செய்யும் விதமாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உதாரணமாக ஒரு குளத்திற்கு அருகில் ஒரு தெரு இருக்கிறது. அதில் ஒரு பயனர் இருக்கிறார் என்றால், அந்த குளத்தை அடையாளமாகக் கூறுகின்றனர். இது குழப்பத்தையும், தாமதத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் டாலர் முதல் 14 பில்லியன் டாலர் வரை செலவு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புதிய முகவரி அமைப்பை அஞ்சல் துறை உருவாக்கி வருகிறது. இந்த ப்ராஜெக்ட் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் உன்னிப்பாக கண்காணித்தும் வருகின்றனர். பொதுமக்களின் பரிந்துரைகளுக்காக விரைவில் டிராஃப்ட் வெர்ஷன் பகிரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த முகவரி அமைப்பு வெளியிடப்படவுள்ளது. இந்த டிஜிட்டல் முகவரி அமைப்பிற்காக ஒரு புதிய சட்டம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
DIGIPIN வீடு, கடை அல்லது கட்டிடத்தின் துல்லியமான இடத்தை வழங்கும் 10 இலக்க குறியீடாக இருக்கும். வழக்கமான முகவரிகள் சரியாக இல்லாத பட்சத்தில் அதாவது கிராமங்கள், சேரிகள், காடுகள் அல்லது மலைப்பகுதிகள் போன்றவற்றில் இந்த டிஜிபின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.