1. Home
  2. தமிழ்நாடு

ரக்‌ஷா பந்தன் முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.200 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு!

1

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்த சிலிண்டர் விலை உயர்வை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை குற்றம் சாட்டி வருகின்றன.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் ரூ. 50 விலையேற்றம் செய்யப்பட்டு, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும் கேஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருப்பதும், மானியமும் வழங்கப்படாமல் இருப்பதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இந்தநிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது கேஸ் சிலிண்டர் விலையை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அதன்படி வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு ரூ.400 வரை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒட்டு மொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.200 மானியத் தொகையை மத்திய அரசே கொடுத்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ”ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பெண்களுக்கு பரிசளிக்கும் விதமாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விரைவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like