மத்திய அரசின் சூப்பர் திட்டம் : ஆடு, கோழி, பன்றி பண்ணை அமைக்க 50% மானியம்..!
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து சிறப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் இந்த திட்டமானது, நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (AHIDF) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.. கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள மத்திய அரசின், தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ், கால்நடை வளர்ப்புக்கென சிறப்பு மானியமும் வழங்கப்படுகிறது. இதன் நோக்கமானது கோழி, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறி, வெள்ளாடு இனங்களை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதல் ஆகும்.
செம்மறி ஆடுகள்: இந்த திட்டத்தின்கீழ், கோழி, வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள், பன்றிகள் பண்ணை அமைக்கவும் தீவனம், தீவனப்பயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது..வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் மற்றும் 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீதம் மானியம் அதாவது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
கோழிப் பண்ணை: இந்த திட்டத்தின்கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1,000 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழிக்குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீதம் மானியம் அதாவது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
பன்றி பண்ணை வைக்க முயல்போருக்கும் ரூ.30 லட்சம் வரை மானியம் உண்டு.. பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் மற்றும் 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில் மூலதனத்தில் 50 சதவீதம் மானியம் அதாவது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
பயனாளிகளின் தகுதிகள்: இந்த திட்டத்தின் கீழ் தனிநபர், சுயஉதவிக் குழுக்கள் (SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு (FPO), விவசாயக் கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவார்கள்..
பயனாளிகள் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் தொழில் முனைவோர் அல்லது தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கிக் கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும். பயனாளிகள் திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பு வோர் https://nlm.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின்படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும். பிறகு மத்திய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் 2 தவணைகளில் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொள்ளலாம்.