1. Home
  2. தமிழ்நாடு

கவர்னர்கள் மலிவான-தரம்தாழ்ந்த அரசியல் செய்கின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

1

தி.மு.க. தலைவரும் , முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தையும் தமிழ்நாட்டையும் தலைமையேற்று வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1970-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார். அதில் ஐந்தாவது முழக்கம், 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பதாகும். பன்முகக்தன்மை கொண்ட இந்திய மத்தியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால்தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய மத்தியம் வலிமையுடன் செயல்பட முடியும்.

பத்தாண்டுகால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள கவர்னர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.கவர்னர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான - தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது.

 ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி - சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை மத்திய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர - அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிக்ஜாம் புயல் - மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை - வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார். 

நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இன்டியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது.

தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு - சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்.என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like