ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக சட்டப்பேரவையை அவமதித்துவிட்டார் - அமைச்சர் சிவசங்கர்..!
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர் என் ரவி, அவையை புறக்கணித்து வெளியேறியது குறித்து பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், முதலில் எல்லாம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போன்றவர்கள்தான் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். இப்போதிருக்கும் ஆளுநர் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தடுக்கும் விதத்தில்தான், செயல்படுகிறார்.
அதிமுக ஆட்சியிலும் கூட, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து பேரவைத் தொடங்கி, அவை முடியும்போது தேசிய கீதம் இசைக்கப்படுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளார்.
அதுபோலவே, இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, அவைத் தலைவர் உரை நிறைவு பெற்றதும், தேசிய கீதம் இசைக்கப்பட்டுத்தான் அவை நிறைவு பெற்றுள்ளது.
எனவே தேசிய கீதத்துக்கு எப்போதும் தமிழக மக்கள் அவமரியாதை செய்பவர்கள் அல்ல. தமிழக சட்டப்பேரவையும் அவமரியாதை செய்வது அல்ல. ஆனால், வேண்டுமென்றே இந்த வாதத்தை முன்வைத்து ஒரு நாடகத்தை நிகழ்த்த முன்வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே, அவையையும், தேசிய கீதத்தையும் அவமரியாதை செய்ததே ஆளுநர் ஆர்.என். ரவிதான். எனவே, அவர் இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய கீதம் மீதும், ஒருமைப்பாட்டின் மீதும் தமிழக மக்களும், அரசும் அதிகப் பற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆளுநர் அவையை புறக்கணித்தது, தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லக் கூடாது என்பதற்காகவேதான். கடந்த ஆண்டும் இதைப்போலவே செய்திருந்தார். கடந்த ஆண்டும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே, அவர்தான் அதனை அவமரியாதை செய்து, அவையிலிருந்து வெளியேறினார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.