சென்னையில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் : கவர்னர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை பலப்படுத்தும் வகையில் மத்திய அரசு பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின்கீழ் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு தொடங்கியது.
கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை ஒருமாதம் நடத்தப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இதில் 2500 பேர் பயணம் செய்து காசி சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியை இந்த ஆண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி நாளை 17-ம் தேதி முதல் வருகிற 30-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டும் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பை சேர்ந்த தமிழ் மக்கள் சிறப்பு ரயில்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.40 மணி அளவில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. சென்ட்ரலில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட இந்த ரயிலில் 3 பெட்டிகளில் 216 மாணவர்கள் புறப்பட்டு சென்றனர். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு ரெயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நேற்று புறப்பட்ட ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணி அளவில் வாரணாசியை சென்றடையும். அங்கு தமிழக மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள்.
பின்னர் 216 பேரும் வருகிற 20-ம் தேதி வாரணாசியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்கள். நேற்று காலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் 3 சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்
கோவையில் இருந்து நாளை ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வருகிற 19, 23, 25, 27 ஆகிய தேதிகளிலும் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் வாரணாசிக்கு இயக்கப்படுகிறது. வாரணாசியில் இருந்து வருகிற 21, 22, 24, 26, 28, 30 ஆகிய தேதிகளிலும் ஜனவரி 1-ம் தேதியும் தமிழகம் திரும்புவதற்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.