அரசுப் பள்ளி பெண் ஊழியருக்கு கத்திக்குத்து.. விசாரணையில் வெளியான தகவல்..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கற்பகநாதர் குளம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (34). இவருடைய கணவர் கண்ணன். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். புவனேஸ்வரி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இளநிலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது புவனேஸ்வரியின் மீது இரு சக்கர வாகனத்தை மோதிய மதிவாணன் என்ற நபர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை அருகில் இருந்த பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். புவனேஸ்வரியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து விசாரணையில் பள்ளி நாட்கள் முதல் புவனேஸ்வரி உடன் நண்பராக பழகி வந்த மதிவாணன் அவரது கணவர் வெளிநாடு சென்றதும் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து புவனேஸ்வரி தனது உறவினர்களிடம் கூறியதை அடுத்து அவர்கள் மதிவாணனை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் புவனேஸ்வரியை அவர் கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. மதிவாணனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.