அரசு அதிகாரி லஞ்சம் பெற்றது மட்டும் இத்தனை கோடியோ... அதிர்ச்சியில் அதிகாரிகள் !

வேலூர் மாவட்டம் காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வேலூர் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மாவட்ட சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளராக பன்னீர்செல்வம் (51) என்பவர் பணியாறிந்து வருகிறார்.
இவர் மீது தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட அங்கிகாரம் பெறுவதற்காக அதிகளவு லஞ்சம் பெற்று வந்ததாக புகார்கள் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த மனுக்கள் மீதான பரிசீலனை குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லஞ்சப் பணம் பரிமாற்றப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
கூட்டத்தைத் தொடர்ந்து காட்பாடி காந்தி நகரில் பன்னீர்செல்வம் தங்கும் வாடகை வீட்டிற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அதிரடியாக வீட்டில் புகுந்து முதலில் பன்னீர்செல்வத்தின் காரை சோதனை செய்துள்ளனர். அதில், ரூ.2.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது அலுவலகம் போல் செயல்படும் வாடகை வீட்டிலும் சோதனை நடத்தியதில் ரூ.31. 23 லட்சம் என மொத்தம் ரூ.33. 73 லட்சம் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அதன்பிறகு பாரதி நகரில் உள்ள பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான வீட்டில் மதியம் முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு கணக்கில் வராத ரூ.2.30கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 3.6 கிலோ தங்க நகைகள், ஆறரை கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து சோதனை நடப்பதால் மேலும் பல மடங்கு பணம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in