அமைச்சர் ராஜகண்ணப்பன் காலுக்கு அடியில் வைக்கப்பட்ட 6 மாத குழந்தை- காரணம் இதுதான்..!!

கோவை திருச்சி சாலையில் இருக்கும் போக்குவரத்து கழக பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதை நேற்று நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்.
அப்போது மேடைக்கு வந்த கழக பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் கண்ணன் என்பவர், தனது 6 மாத குழந்தையை அமைச்சரின் காலில் வைத்துவிட்டார். இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட ஆட்சியரும் மேயரும் குழந்தையை உடனடியாக கையில் எடுத்துக் கொண்டனர்.
அப்போது கண்ணன், தனது மனைவி அண்மையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். எனக்கு 6 வயதில் ஒரு குழந்தையும், 6 மாத குழந்தையும் உள்ளன. இரண்டுமே பெண் குழந்தைகள். எனது தாயார் தான் குழந்தைகளை பராமரித்து வருகிறார். அவரால் வயது மூப்பின் காரணமாக எல்லா வேலைகளையும் செய்ய முடியவில்லை. அதனால் சொந்த ஊரான தேனிக்கு பணிமாறுதல் கோரி பலமுறை பொது மேலாளரிடம் கேட்டுவிட்டேன். அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் எனக்கு நீங்கள் தான் உதவ வேண்டும் என்று அமைச்சரிடம் ஓட்டுநர் கண்ணன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து ஓட்டுநரின் கோரிக்கையை பரீசிலிப்பதாக கூறிச் சென்றார். அமைச்சர் பங்கெடுத்த விழாவில் திடீரென ஓட்டுநர் ஒருவர் தனது 6 மாத குழந்தையை அவரது காலில் வைத்து கோரிக்கை விடுத்த சம்பவம் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.