பழுதாகி நின்ற லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து- ஓட்டுநர் பலி

மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலை அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து பாபநாசம் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலை அருகே அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காத அரசு பேருந்து ஓட்டுனர், லாரியின் பின்னால் பலமாக மோதினார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அரசு பேருந்து ஓட்டுநர் சங்கரன் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர் . 20 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
படுகாயம் அடைந்தவர்களை விரைவாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .சம்பவ இடத்துக்கு விரைந்த கொட்டாம்பட்டி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
newstm.in