துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா.. சட்டசபையில் நிறைவேற்றம்..!

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.
இந்த மசோதா குறித்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது: “உயர்கல்வியில் மாநில அரசை மதிக்காமல் கவர்னர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது. இது, மக்களாட்சியின் தத்துவத்துக்கு விரோதமாக உள்ளது.
துணைவேந்தர் நியமன அதிகாரம் கவர்னரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும். அத்துடன், கவர்னர் - மாநில அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும்.
துணைவேந்தர்களை கவர்னர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். 13 பல்கலைக்கழகங்கள் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை ஆற்றி வருகின்றன.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மாநில அரசு தான் துணைவேந்தரை நியமிக்கிறது; இதே நிலைதான் கர்நாடகா, தெலங்கானாவிலும் உள்ளது” எனக் கூறினார்.
இந்த சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது.
வேல்முருகன் எம்எல்ஏ பேசும்போது, “மாநில உரிமைகளை படிப்படியாக மீட்டெடுக்கும் முதல்வருக்கு பாராட்டுகள்; கால்நடை, மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்” எனக் கூறினார்.
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேசும்போது, “தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் நடுநிலையோடு திறமைவாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்போது அரசியல் உள்நோக்கத்துடன் இருக்க வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.
இதையடுத்து, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.