சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!
கடந்த சில மாதங்களாக முதல்வர் ஸ்டாலினையும், அவரது குடும்பத்தினரையும் குறிவைத்து சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் பேசி வந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், ரெட் பிக்ஸ் என்கிற யூடியூப் சேனில் கடந்த மாதம் பேசிய சவுக்கு சங்கர், பெண் போலீஸாரையும், காவல்துறை உயரதிகாரி ஒருவரையும் இணைத்து தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இதுகுறித்து கோவை சைபர் க்ரைம் பெண் சப் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சவுக்கு சங்கரை அண்மையில் கைது செய்தனர். பின்னர் அவரை அழைத்து வரும் வழியில் போலீஸ் வேன் விபத்தில் சிக்கியது. இதையடுத்து, சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, சவுக்கு சங்கரின் நண்பர்கள் இரண்டு பேர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், சவுக்கு சங்கர் மீதும் கஞ்சா வழக்கு பாய்ந்தது.
இவ்வாறு பல வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவான நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸிலும் இனறு அவர் மீது புதிய வழக்கு பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி, அவர் மீது சென்னை பெருநகர போலீஸார் குண்டர் சட்டத்தின் வழக்கு பதிவு செய்தனர். கோவை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் நேற்று மாலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.