சிறப்பு டூடுல் வெளியிட்டு கூகுள் 'சர்ப்ரைஸ்'..!

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான பிரீமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) டி-௨௦ தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் வதோதரா (குஜராத்), லக்னோ (உ.பி.,) என இரு இடங்களில் நடக்க உள்ளன. இத்தொடரில் சர்வதேச வீராங்கனைகளுக்கு, இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் சவால் கொடுத்து சிறப்பாக செயல்படுகின்றனர்.
ஸ்ரேயான்கா, சைகா உள்ளிட்ட பலர் இத்தொடரின் சிறந்த கண்டு பிடிப்பாக திகழ்கின்றனர். முதல் இரண்டு சீசனில் மும்பை (2023), பெங்களூரு (2024) அணிகள் கோப்பை வென்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவின் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு, கார்டுனர் தலைமையிலான குஜராத் அணிகள் மோத உள்ளன. கடந்த 'மினி' ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட சிம்ரன் (ரூ. 1.90 கோடி), குஜராத் அணிக்கு கைகொடுக்கலாம்.
இந்நிலையில், மகளிர் ப்ரீமியர் லீக் தொடர்பாக, கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. அந்த படத்தில், 'ஸ்டம்ப், பேட் மற்றும் பந்துகள் இடம்பெற்றுள்ளன. அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு கார்ட்டூன் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.