இனி இந்த நபர்களுக்கு கூகுள் பே, போன் பே வேலை செய்யாது..!

வரும் ஏப். 1ஆம் தேதியில் இருந்து சில மொபைல் நம்பர்கள் மூலம் UPI சேவையை பயன்படுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயலற்ற மொபைல் நம்பர்கள் அல்லது மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொபைல் நம்பர்கள் ஆகியவற்றில் UPI சேவைகள் இனி வேலை செய்யாது என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுக்கவே இத்தகைய எண்களின் கணக்குகளை துண்டிக்குமாறு வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்களுக்கு (PSPs) அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க, தங்கள் UPI சேவையில் பதிவு செய்த மொபைல் எண்கள் செயலில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
UPI உடன் இணைக்கப்பட்ட செயலற்ற மொபைல் நம்பர்கள் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். பயனர்கள் தங்கள் எண்களை மாறினாலோ அல்லது செயலிழக்கச் செய்தாலோ அவர்களின் UPI கணக்குகள் பெரும்பாலும் அப்படியே செயலிலேயே இருக்கும்.
இதனால் அவர்களின் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. மோசடி செய்பவர்கள் இதை பயன்படுத்தி அந்த கணக்குகளில் நிதி பரிவர்த்தனைகளுக்கான அணுகலைப் பெற வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே, வங்கிகள் மற்றும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றவை இப்போது UPI அமைப்பில் இருந்து செயலற்ற எண்களை நீக்கும் நடவடிக்கைகளில் இறங்க உள்ளன.
ஒருவேளை அப்படி நீக்குவதற்கு முன்னர், பயனருக்கு வங்கி அல்லது PSPs மூலம் நோட்டிபிக்கேஷன் அனுப்புவார்கள். எச்சரிக்கப்பட்டும் மொபைல் நம்பர் செயலாக்கம் பெறாவிட்டால், அதன் UPI சேவையை நீக்கிவிடுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் மொபைல் நம்பரை அப்டேட் செய்வதன் மூலம் மீண்டும் அந்த UPI அணுகலை பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மொபைல் நம்பரை மாற்றிவிட்டு அதனை வங்கியில் அப்டேட் செய்யாமல் இருப்பவர்கள்; அழைப்புகள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட பயன்பாடுகளை நீண்ட நாள்களாக பயன்படுத்தாதவர்கள்; மொபைல் நம்பரை சரண்டர் செய்துவிட்டு அதனை வங்கியில் அப்டேட் செய்யாமல் இருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, நம்பரை திருப்பிக்கொடுத்த பின்னர் அதே நம்பர் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டாலும் சிக்கலையே ஏற்படுத்தும், எனவே அதனை வங்கியில் தெரிவிக்க வேண்டும்.
UPI சேவைக்கு மொபைல் நம்பர் மிக முக்கியம் என்பதால் அந்த மொபைல் எண் செயல்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் மொபைல் நம்பருக்கு வங்கியின் ஓடிபி, வங்கியின் எஸ்எம்எஸ், அழைப்புகள் ஆகியவை வருகிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ளுங்கள்.