கூகுள் மேப் பொய் சொல்லாது!! கூகுள் மேப் நம்பி கால்வாயில் கவிழ்ந்தது சுற்றுப் பயணிகள் கார்..!
கேரளாவுக்கு ஹைதராபாத்தில் இருந்து சுற்றுலா வந்த பயணிகளின் கார் கோட்டயம் அருகே உள்ள குருபந்தராவில் இருந்த கால்வாயில் வெள்ளிக்கிழமை இரவு விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த அனைவரும் மீட்கப்பட்டனர்.கூகல் வரைபடத்தைப் பின்பற்றி ஆலப்புழா நோக்கிச் செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
கூகல் மேப்பை கண்மூடித்தனமாக நம்பி ஓட்டுநர் இடதுபுறமாக வாகனத்தைத் திருப்பியபோது, அது கால்வாய்க்குள் மூழ்கியதாக தகவல் வெளியானது.விபத்து நடந்த உடனேயே பயணிகளில் ஒருவர் காரில் இருந்து தப்பினார்.
அவர் அங்கிருந்த உள்ளூர்வாசிகளிடம் காருக்குள் சிக்கியுள்ள இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் காப்பாற்றும்படி உதவி கோரினார்.இதையடுத்து, தீயணைப்புப் படையினரும் காவலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டுநர், “கால்வாயில் நீர் நிரம்பி அது சாலையை மூழ்கடித்திருந்தது. சாலையில்தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது என நினைத்து காரைத் தொடர்ந்து ஓட்டியபோது, அது கால்வாய்க்குள் இறங்கியது.
“வாகனத்தின் பின்புறம் மூழ்கத் தொடங்கியபோது தான்விபத்தை நாங்கள் உணர்ந்தோம். வாகனம் தொடர்ந்து நீரில் நகர்ந்தது, நாங்கள் அதில் சிக்கிக்கொண்டோம்,” என்று கூறினார்.
சனிக்கிழமை காலை உள்ளூர் மக்களின் உதவியுடன் வாகனத்தை கால்வாயில் இருந்து காவலர்கள் வெளியே மீட்டனர்.
கேரளாவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபரில், கூகல் மேப் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி காரை ஓட்டி, இரண்டு இளம் மருத்துவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.