GOOGLE பொய் சொல்லாது... கோவா போக வழி கேட்டால் நடு காட்டிற்கு அழைத்து சென்ற கூகிள் மேப்..!
பீகார் மாநிலத்திலிருந்து கோவா மாநிலத்திற்குக் காரில் சென்ற ஒரு குடும்பத்தினர், கூகல் நிலப்படத்தால் (Google Maps) நடுக்காட்டில் சிக்கித் தவிக்க நேர்ந்தது.
குறுக்குவழியில் சென்றால் விரைவாகச் செல்லலாம் என்று கூகல் நிலப்படம் காட்டிய பின்னரே கடுஞ்சோதனை தொடங்கியது.
ஷிரோலி, ஹெம்மடகா அருகிலுள்ள காட்டுப்பகுதி வழியாகச் செல்வதே குறுகிய தொலைவுப் பயணமாக அமையும் என கூகல் நிலப்படம் காட்டியது. அவ்வழியில் சென்றால் ஏற்படும் ஆபத்தை உணராத குடும்பத்தினர், எட்டுக் கிலோமீட்டர் தொலைவிற்குக் கரடுமுரடான பாதையில் காரில் சென்றனர்.
ஆயினும், கைப்பேசி வழியாகத் தொடர்புகொள்ள முடியாமல் போனதாலும் காட்டிலிருந்து வெளியேற வழி தெரியாததாலும் தாங்கள் இக்கட்டில் சிக்கிக்கொண்டதை அக்குடும்பத்தினர் உணர்ந்தனர்.
பலமுறை முயன்றும் வழியைக் கண்டுபிடிக்க முடியாததால், நடுக்காட்டில் அச்சமூட்டும் சூழலுக்கிடையே காரிலிருந்தபடியே இரவுப் பொழுதை அவர்கள் கழிக்க நேர்ந்தது.
விடிந்ததும் உதவி நாடி நடந்தே சென்ற அவர்களுக்கு கிட்டத்தட்ட 14 கிலோமீட்டருக்குப் பிறகே நம்பிக்கை வெளிச்சம் தென்பட்டது. அப்போதுதான் கைப்பேசிக்கான அலைவரிசை கிட்ட, அவசரகால உதவி எண்ணான 112ஐத் தொடர்புகொண்டனர்.
தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர், அக்குடும்பத்தினரைக் காட்டுப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர்.
கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் கூகல் நிலப்படம் தவறான வழிகாட்டியதால் கட்டி முடிக்கப்படாத பாலத்திலிருந்து கார் கீழே விழுந்து மூவர் உயிரிழந்த சம்பவம் நேர்ந்தது.