பெட்ரூமில் பாட்டியுடன் ஒன்றாக விடிய விடிய படுத்து தூங்கிய நல்ல பாம்பு..!!
கடலூர் மஞ்சக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில் ஸ்ரீதர் என்பவரது வீட்டில் வயதான பாட்டி படுக்கையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலையில் படுக்கையில் விசித்திரமான சத்தம் வரவே அலறியடித்து எழுந்த பாட்டி லைட்டை போட்டு பார்த்த போது அங்கு படுக்கையில் பாம்பு இருப்பதைக் கண்டு அலறினார்.
உடனடியாக அந்த வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது படுக்கையில் பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாம்பு பிடிக்கும் செல்லா என்ற நபருக்கு தகவல் கொடுத்தனர்.
பாம்பு ஆர்வலர் செல்லா அந்த பகுதிக்கு வந்து வீட்டின் படுக்கையில் பார்த்தபோது பாம்பு இருந்தது அதனை பிடிக்க முற்பட்டபோது படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு ஆக்ரோஷமாக செல்லாவை கடிக்க முற்பட்டது.
இவ்வளவு ஆக்ரோஷமாக இருந்த பாம்பு பாட்டியுடன் எப்படி சாதுவாக படுத்து தூங்கியது என கேள்வி எழுப்பிய செல்லா அந்தப் பாம்பினை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்று காப்புக் காட்டில் விட்டார்.
படுக்கையின் மீது பாம்பு எப்படி ஏறியது என அவர்களுக்கு தெரியாத நிலையில் கொடியில் காய்ந்த துணிகளை கொண்டு வந்து படுக்கையில் போட்டு இருப்பது தெரியவந்தது. கொடியில் காய்ந்த துணிகளுடன் சேர்ந்து அந்தப் பாம்பு உள்ளே வந்து இருக்கலாம் என பாம்பு ஆர்வலர் செல்லா தெரிவித்தார்.