"திரையரங்குகள் குறித்து விரைவில் நல்ல முடிவு வரும்" அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தகவல் !

திரையரங்குகள் குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்றும், வரும் 28-ம் தேதி இது தொடர்பாக ஆய்வு கூட்டத்தில் முதல்வர் முடிவு செய்வார் என்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர், எதிர்க்கட்சி அரசியல் செய்யமால் அவியலா செய்யுமா என்று மு.க.ஸ்டாலின் கூறியதில் இருந்து எதிர்க்கட்சி என்றால் எல்லா பிரச்சினையிலும் அரசியல் தான் செய்யும் என்பதை அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.
அரசியல் செய்வதற்கு எவ்வளவோ வழி உள்ளது. அதனை விட்டு அரசு திட்டங்களை குற்றம் குறை சொல்வது தனது வாடிக்கை என்பதனை மு.க.ஸ்டாலின் ஒத்துக் கொண்டுள்ளார்.எதிர்க்கட்சி என்றால் நாணயத்தின் இருபக்கம் போன்று செயல்பட வெண்டும் என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். எதிர்க்கட்சிக்கான உரிமை மற்றும் கடமையை அண்ணா தெளிவாக கூறியுள்ளார். ஆனால் அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறும் மு.க.ஸ்டாலின் அண்ணாவின் கொள்கைகளை தூரம் எறிந்து விட்டார்.
திமுக எதிர்க்கட்சிக்கு கூட லாயக்கில்லை என்று வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட தயாராகிவிட்டனர்.இனிமேல், திமுக எதிர் கட்சியாக கூட வரமுடியாது. கடந்த 2011-ம் ஆண்டு திமுக எதிர்கட்சியாக கூட வரவில்லை. அதே போன்று வரும் 2021-ல்லிலும் திமுக எதிர் கட்சியாக வரமால் இருக்க இது போன்று கருத்துக்களை மு.க.ஸ்டாலின் கூறினால் போதும், மேலும் நாங்கள் ஆட்சிக்கு வர எளிதாக இருக்கும்.
திரையரங்குகளை திறக்க நாங்களும் ஆவலோடு இருக்கிறோம். மத்தியஅரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.வரும் 28-ம் தேதி முதல்வர் ஆய்வு கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஏ.சி.இல்லமால் பயன்படுத்த முடியாது. மக்களும் அதனை விரும்பமாட்டார்கள்.இது போன்ற பல்வேறு தர்மசங்கடமான சூழ்நிலைகள் உள்ளது. இதையெல்லாம் தெளிவுபடுத்தி விட்டு திரையரங்குகளை திறக்க வேண்டும். எனவே, திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்றார்.