குட் நியூஸ்! பி.எஃப் வட்டி தொகை தீபாவளிக்குள் உங்களுக்கு கிடைக்கும்!!

பி.எஃப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் தீபாவளிக்குள் வரவு வைக்கப்படும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.5 சதவீதமாக அளிக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கடந்த மாதம் முடிவு செய்தது. அதில், 8.15 சதவீத வட்டியை உடனடியாகவும், எஞ்சிய 0.35 சதவீத வட்டியை டிசம்பரிலும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 8.15% வட்டியை ஆறு கோடி வாடிக்கையாளர்களுக்கு தீபாவளிக்குள் வழங்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த வட்டியை முன்னதாகவே வழங்க பி.எஃப் அமைப்பு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக நிதி ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தற்போது பி.எஃப் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பி.எஃப் தொகையை எடுப்பதற்கான நடைமுறையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எளிமைப்படுத்தியுள்ளது. மார்ச் 25ஆம் தேதி முதல் சுமார் 39 லட்சம் தொழிலாளர்கள் 44 ஆயிரம் கோடி ரூபாய் பி.எஃப் பணத்தை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு மக்கள் பயன்பெறும் வகையில் வட்டிக் தொகையை தீபாவளிக்குள் வழங்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8.15 சதவீத வட்டி தீபாவளிக்குள், 0.35 வட்டி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in