இளைஞர்களே குட் நியூஸ்..!! மதுரையில் 3,500 பேருக்கு வேலை காத்துக்கிட்டிருக்கு..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘பினாக்கிள் இன்ஃபோடெக்’ நிறுவனம், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காகத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனம் சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களை விடுத்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மதுரையில் சுமார் 287 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய மற்றும் பிரம்மாண்ட ஐடி கேம்பஸ்-ஐ அமைத்துள்ளது.
பினாக்கிள் இன்ஃபோடெக் நிறுவனத்தின் மதுரை அலுவலகத்தின் கட்டுமான பணிகள் குறித்த புகைப்படங்கள் டிவிட்டரில் பலர் பதிவிட்டு வந்த நிலையில் தற்போது பெரிய அலுவலகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த மதுரை அலுவலகத்தில் சுமார் 3,500 பேருக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளது.
பினாக்கிள் இன்ஃபோடெக் நிறுவனத்தின் புதிய அலுவலகம் மதுரையில் டெக் ஹப் ஆக விளங்கும், ஐடி ஊழியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் வடபழஞ்சி ஐடி பார்க்-ல் கட்டப்பட்டு திறக்க தயாராகியுள்ளது. மேலும் இப்புதிய அலுவலகத்தில் ஊழியர்களைப் பணியில் அமர்த்த இந்நிறுவனம் ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பினாக்கிள் இன்ஃபோடெக் நிறுவனம் கட்டிடகலை, இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான (AEC) நிறுவனங்களுக்குக் பில்டிங் இன்பர்மேஷன் மாடலிங் (BIM) தீர்வுகளை உலகளவில் வழங்குகிறது. இந்நிறுவனத்தின் BIM சேவைகளை திட்ட ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, சொத்து மேலாண்மை, இடர் குறைப்பு, தளவாட திட்டமிடல் மற்றும் செலவு மேம்படுத்தல் ஆகியவற்றை எளிதாக்குவதற்கு பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் இருந்து இயங்கும் பினாக்கிள் இன்ஃபோடெக் நிறுவனம் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இந்தியாவில் துர்காபூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், மதுரை ஆகிய இடத்தில் அலுவலகத்தை வைத்து சுமார் 40 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.