ஒரு நபர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ் - அரசு அறிவுறுத்தல்..!

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதையடுத்து இந்த திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் 'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா' திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழக அரசின் இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக காப்பீடு அட்டையை பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு, ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.இதில், தமிழக அரசின் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிக்கு ஆண்டு வருமானம், ரூ. 1.20 லட்சமாக இருக்க வேண்டும். மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமான வரன்முறை இல்லை.
இத்திட்டத்தில் சேர, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையின் நகல், வருமான சான்றிதழ் (ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்திற்குள்) ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். பயனாளிகள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உறுப்பினர் சேர்க்கை மையத்தில், விண்ணப்பத்தை சமர்ப்பித்து, காப்பீடு அட்டையை பெறலாம்.
இந்த சூழலில் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஒரு நபர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு காப்பீடு அட்டை இல்லை என்பதற்காக தீவிர சிகிச்சை வழங்குவதில் காலதாமதம் செய்யக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒரு நபர் ரேஷன் கார்டுதாரர்கள் சிலர் காப்பீடு அட்டை வைத்துக் கொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆதரவற்றவர்களாக இருக்கும் அவர்களுக்கு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும்போது காலதாமதம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.