பெண்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..! 6 இடங்களில் வருகிறது ‘தோழி’ ஹாஸ்டல்..!

சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் பெண்கள் பலர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் பெண்கள் பெரும்பாலும் தனியார் பெண்கள் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டி உள்ளது. குறைந்த வாடகையில் நல்ல வசதிகளோடு கூடிய தங்குமிடம் அமைத்துத் தர வேண்டும் என்பது வேலை செய்யும் பெண்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. இதை நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு. பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழக அரசு தோழி மகளிர் விடுதி என்ற உணவு, உறைவிட விடுதி வசதியை மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது.
சென்னை, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.24 மணி நேர குடிநீர், வைஃபை, சுகாதாரமான கழிவறை என தனியார் விடுதிகளுக்கு இணையான வசதிகள் தோழி விடுதியில் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் இங்குள்ளன.இந்த விடுதிகளில் மாத அடிப்படையில், நாள் கணக்கில் பெண்கள் தங்கி கொள்ளலாம். தனியார் விடுதிகளை விட வாடகை மிகவும் குறைவு.
இந்நிலையில் புதிதாக மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதி அமைக்க ரூ.70 கோடி செலவில் கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது. இதில் 1200 பெண்கள் தங்கும் வகையில் ராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் தலா 1 விடுதி அமைய உள்ளது. மேலும், 950 பேர் தங்கும் வகையில் 2 விடுதிகள் சென்னையில் அமைக்கப்பட உள்ளன.