சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்..! இனி கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்லலாம்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினரின் அனுமதியை பெற வேண்டும்.
கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கும் பாறை, மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன.
வனத்துறையினரின் தடையால் இப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் யானைகள் பேரிஜம் ஏரிப் பகுதியை விட்டு இடம் பெயர்ந்து வேறு பகுதிக்குச் சென்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு புதன் கிழமை காலை முதல் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, வழக்கம்போல் பேரிஜம் ஏரிக்குச் சென்று வரலாம் என்ற அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.