தமிழக மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

நகருக்கு ஈடாக புறநகரப் பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. முன்பு காலி இடமாகவும், விவசாய நிலமாகவும் காணப்பட்ட இடங்கள் எல்லாம் தற்போது கட்டிடங்களாக மாறியுள்ளன.
மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டியது அவசியம். நகர பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தும்வகையில், கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மினி பேருந்துகள் இயக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வழித்தடங்களுக்கு ‘பெர்மிட்’ பெற்று தனியார் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடக்க காலத்தில் அரசுப் பேருந்துகள் சேவை இல்லாத 17 கிலோ மீட்டர் வழித்தடம், அரசுப் பேருந்துகள் செல்லும் 4 கிலோ மீட்டர் வழித்தடம் என 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், காலப் போக்கில் மினி பேருந்துகளின் சேவை குறைந்து விட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 2025 மே மாதத்திற்குள் புதிய மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். மேலும், 'தமிழகத்தில் 3,021 மினி பஸ் வழித்தடங்கள் உள்ளன.
புதிய மினி பஸ்களை இயக்க 1,801 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 1,549 தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார். எந்தெந்த மாவட்டங்களில் மினி பஸ் இயங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.