தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..! இனி ரூ.70-க்கு விற்கப்படும் மாத்திரை வெறும் 11 ரூபாய்க்கு கிடைக்கும்..!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில், ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் இந்த முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இதில் 50 சதவீதம் பணமாகவும் 50 சதவீதம் மருந்துப் பொருட்களாகவும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழகம் முழுவதும் பலரும் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு மருந்தகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் 33 இடங்களிலும் மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என்ற எண்ணிக்கையில் முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்படவுள்ளன.
1000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மருந்தகங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மேலும் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக கடையையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்க இருப்பதன் வழி, 75% அளவுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். உதாரணத்திற்கு தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 மட்டுமே கிடைக்கும்.
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது