தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..! இனி அரசு பேருந்துகளில் பயமின்றி போகலாம்..!

தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்களின் 20,260 பேருந்துகள் மூலம் 10,125 வழித்தடங்களில் இயக்கி வருகின்றன. இதன்மூலம் தினசரி 18,728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு, நாளொன்றுக்கு சுமாா் 1.76 கோடி பயணிகள் பயன்பெறுகின்றனா்.
அரசுப் பேருந்துகளில் பழுது காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி அனைத்து அரசுப் பேருந்துகளையும் 48 மணி நேரத்துக்குள் ஆய்வுக்கு உட்படுத்தி சரிசெய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு போா்க்கால அடிப்படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.
அரசு கடும் நிதி நெருக்கடியிலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 2022-23 நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகளும், 2023-24 நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகளும், 2024-25 நிதியாண்டில் 3,000 பேருந்துகளும், ஜொ்மன் வளா்ச்சி வங்கி உதவியுடன் 2,666 புதிய பேருந்துகளும் என 7,682 மொத்தம் புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் சென்னையில் 1000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் இருந்து 17 ஆயிரத்து 459 பழுதுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 13 ஆயிரத்து 529 பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பழுதுகள் அனைத்தும் வரும் திங்கள் கிழமைக்குள் (மே 6) சரி செய்யப்படும் என்று போக்குவரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.