தமிழக பக்தர்களுக்கு குட் நியூஸ்...இனி எப்போ வேண்டுமானாலும் திருப்பதி செல்லலாம்..!

தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் சிரமங்களை குறைப்பதற்காக கோவையில் இருந்து திருப்பதிக்கு தினமும் அரசு பஸ் சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து அந்தியூர் வழியாக இந்த பஸ் தினமும் திருப்பதிக்கு செல்ல உள்ளது. அதிநவீன வசதி கொண்ட இந்த மிதவை பஸ் சேவை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகமான எஸ்இடிசி மூலம் வழங்கப்பட உள்ளது.
கோவையில் இருந்து தினமும் மாலை 06.30 மணிக்கு புறப்படும் இந்த பஸ் சேவை அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், டி.என்.பாளையம், அத்தாணி, அந்தியூர், அம்மாப்பேட்டை, மேட்டூர், தருமபுரி, வேலூர் வழியாக திருப்பதி சென்றடைகிறது. அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவ 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 05.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். அதே போல் திருப்பதியில் இருந்து தினமும் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அந்தியூர் வந்தடையும்.
இதற்கான பஸ் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.447 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவையை பயன்படுத்தி திருப்பதி செல்ல நினைக்கும் பக்தர்கள் ஆன்லைன் வழியாக SETC இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களுக்கும், கோவை டூ திருப்பதி வழித்தடத்தில் இருக்கும் அந்தியூர், மேட்டூர், சேலம், தர்மபுரி, வேலூர் பகுதியில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களும் இந்த பஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ரயில் கட்டண சேவையிலேயே இந்த பஸ் சேவை வழங்கப்படுவதால் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஒரு பஸ்சில் 36 சீட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் பக்தர்கள் தங்களின் திருப்பதி பயணத்தை இப்போதே கணக்கிட்டு, டிக்கெட்களை முன்பதிவு செய்த கொள்ளலாம். அதே போல் திருப்பதியில் இருந்து மீண்டும் ஊர் திரும்புவதற்கான டிக்கெட்களையும் முன்கூட்டியே முன்பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
திருப்பதியில் தற்போது கூட்டம் வழக்கமான அளவிலேயே உள்ளது. ஜூன் 05 மற்றும் 6 ஆகிய இரண்டு தேதிகளிலும் 67,284 பேர் மட்டுமே சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திவ்ய தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு 12 முதல் 15 மணி நேரம் ஆவதாகவும், சில நேரங்களில் 20 மணி நேரம் வரை ஆவதாகவும் சொல்லப்படுகிறது.