ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்... 'தாயுமானவர்' திட்டத்தில் புதிய சலுகை - இனி பொருட்கள் வாங்குவது இன்னும் எளிது!
தமிழக அரசு செயல்படுத்தி வரும் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்களைப் பெறுவதில் நிலவி வந்த தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் புதிய தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு நேரில் வந்து பொருட்களை வாங்குவதில் உள்ள சிரமத்தைக் குறைக்க 'தாயுமானவர் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கடை ஊழியர்களே தகுதியுள்ள பயனாளிகளின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று மாதந்தோறும் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கும் போது, விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4G சர்வர் கருவிகள் அடிக்கடி பழுதடைவதாகவும், இணைய வேகம் குறைவாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் பயனாளிகளின் கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி (Iris) ஆகியவற்றைச் சரிபார்த்துப் பதிவேற்றுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பணியாளர்களின் கோரிக்கை மற்றும் முதியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு தற்போது ஒரு முக்கியச் சலுகையை அறிவித்துள்ளது. இனி தாயுமானவர் திட்டப் பயனாளிகளுக்கு கைரேகை அல்லது கண் கருவிழிப் பதிவு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பதிவாகவில்லை என்றால், அதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை.
அங்கீகரிக்கப்பட்ட உரிய பதிவேட்டில் பயனாளியின் கையெழுத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, ரேஷன் பொருட்களைத் தடையின்றி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், சர்வர் கோளாறு காரணமாக முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், தொழில்நுட்பக் காரணங்களால் பொருட்கள் கிடைக்காமல் போகும் நிலையும் தவிர்க்கப்படும். அரசின் இந்த மனிதாபிமான நடவடிக்கை, விளிம்பு நிலை மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.