செல்போன் பயனாளர்களுக்கு குட் நியூஸ்..! இனி ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே விழிப்புணர்வு மெசேஜ்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. மேலும், பங்குச்சந்தையில் அதிக லாபம், பரிசு விழுந்துள்ளது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஆன்லைனில் மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில், ஒருவர் மற்றொருவரை போனில் அழைத்தால் வாய்ஸ் மெசேஜ் மூலம் வழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வாய்ஸ் மெசேஜில், இணையதள குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்... என்று கூறும். அவசர தேவைக்காக ஒருவரை போனில் அழைக்கும்போது முதலில் வாய்ஸ் மெசேஜ் வரும். அதன்பின் தான் கால் ரிங் போகும். ஒரு நாளைக்கு பல தடவைக்கு மேல் இந்த வாய்ஸ் மெசேஜ் வந்ததால் மக்கள் இணையதளத்தில் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து தினமும் இரு முறை மட்டுமே சைபர் கிரைம் விழிப்புணர்வு தொடர்பான வாய்ஸ் மெசேஜ் ஒலிக்கும் என்றும் விரைவில் இது அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வாய்ஸ் மெசேஜ் முழுமையாக நீக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.