1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! எண்ணெய் விலை குறையப் போகுது..!

1

கச்சா சூரியகாந்தி எண்னெய், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா பாமாயில் போன்ற கச்சா சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை சுங்க வரி குறைக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கு இடையிலான இறக்குமதி வரியில் உள்ள வேறுபாடு 8.75 சதவீதத்தில் இருந்து 19.25 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பின் பலனை உடனடியாக நுகர்வோராகிய பொதுமக்களுக்கு வழங்குமாறு மத்திய உணவு அமைச்சகம் சமையல் எண்ணெய் தொழில் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளரின் தலைமையில் முக்கிய சமையல் எண்ணெய் தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுடன் இதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் மீதான வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில் துறை பங்குதாரர்கள் தங்கள் விலையை விநியோகஸ்தர்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) இந்த உத்தரவுக்கு ஏற்ப உடனடியாக அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கடைகளில் நாம் வாங்கும் சமையல் எண்ணெய்களுக்கான விலை இனி வெகுவாகக் குறைக்கப்படும். சமையல் எண்ணெய் என்பது ஒவ்வொரு வீட்டிலும் மிக முக்கியமான ஒரு பொருளாக உள்ளது. எண்ணெய் இல்லாமல் பெரும்பாலான உணவுகளை சமைக்க முடியாது. எனவே எண்ணெய் விலை குறைந்தால் அது பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.

சமையல் எண்ணெய் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு (மக்களுக்கு) எண்ணெய் விலைக் குறைப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும், புதுப்பிக்கப்பட்ட பிராண்ட் MRP தாள்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாராந்திர அடிப்படையில் உணவுத் துறையுடன் இது தொடர்பான அப்டேட்களை பகிர்ந்து கொள்ளவும் எண்ணெய் விநியோக இறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

MRP விலை தொடர்பான பிரச்சினைகள் குறித்து புகாரளிப்பதற்கான ஒரு வடிவத்தை உணவு அமைச்சகம் சமையல் எண்ணெய் துறையுடன் பகிர்ந்துள்ளது. "பொதுமக்கள் சில்லறை விலைகளில் ஏற்படும் குறைப்பால் பயன்பெறுவதை உறுதி செய்வதற்கு விநியோகச் சங்கிலி மூலம் நன்மைகளை சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை மற்றும் வரிகளில் ஏற்பட்ட உயர்வு குறித்த விரிவான மதிப்பாய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு சாதாரண மக்கள் மீது பணவீக்க அழுத்தத்தை அதிகரித்தது. சில்லறை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து, அதன் மூலம் உணவு பணவீக்கம் உயர வழிவகுத்தது. கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கு இடையிலான 19.25 சதவீத வரி வேறுபாடு உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பல்வேறு எண்ணெய்களின் இறக்குமதியைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like