விவசாயிகளுக்கு குட் நியூஸ் : ஜூன் 15ம் தேதி கல்லணை திறக்கப்பட வாய்ப்பு..!

டெல்டா மாவட்டங்கள் உள்பட 20 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயிர் பாசனத்திற்கு மேட்டூர் அணையையே நம்பியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி அணை மூடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் வழக்கம் போல ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. சேலத்தில் சுற்றுப் பயணம் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையையும் திறந்து வைக்க உள்ளார்.
குறுவைக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் சாகுபடிக்கான பணிகளை கவனித்து வருகின்றனர். நாற்றாங்கால் தயார் செய்வது, எரு உள்ளிட்ட அடி உரங்கள் இடுவது, உழவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மோட்டார் பம்பு வசதியுள்ள விவசாயிகள், குறுவை முன்பட்ட சாகுபடியை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு சுமார் 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.
அதேபோல விரைவில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் உயிரி உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள், விதைகள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட உள்ளது. வரும் 15ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வரவுள்ள நிலையில், இதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மேட்டூரில் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீர் மாயனூர் கதவணை, மேலணை கடந்து ஜூன் 15ஆம் தேதி கல்லணை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 16ஆம் தேதி கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தஞ்சை வரும் சூழலில் கல்லணையில் அவரே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கல்லணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிடுவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளன. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.