1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! தமிழக அரசு அறிவித்துள்ள சர்ப்ரைஸ் சலுகைகள்..!

1

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் கூட்டுறவு நிறுவனங்களின் சலுகைகள் என்னென்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார். 

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் பல்வேறு சேவைகளை வழங்கும் சங்கங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, விவசாய நிலத்தை உழுதல், விதைப்பு, பயிர் பாதுகாப்பு, அறுவடை உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் வேளாண் தொழிலாளர்கள் குறைந்துவிட்ட நிலையில், விரைவாக, குறித்த நேரத்திலும் விவசாய பணிகள் மேற்கொள்ள, 2,938 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இருப்பில் உள்ளன. இதுதவிர வேளாண் இயந்திரங்களை நியாயமான வாடகையில் விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க'Coop e-வாடகை' என்ற சேவை கூட்டுறவுத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் டிராக்டர், மினி டிராக்டர், நெல் நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம், தானியங்களை தூற்றி சுத்தம் செய்யும் இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட விவசாய இயந்திரங்களும், பவர் டில்லர், ரோட்டோவேட்டர் தெளிப்பான்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உள்ளன.

விவசாயிகள் தங்களின் தேவைக்கு பயன்படும் விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை 'உழவர் செயலி' மூலம் தங்கள் வட்டாரத்தில் இருக்கும் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வாடகை உள்ளிட்ட விவரங்களைப் பெற்று, முன்பதிவு தேதி, நேரம், நிலத்தின் பரப்பு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கைபேசிக்கு, இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். முன்பதிவு செய்த, குறித்த தேதி மற்றும் நேரத்தில் விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தலாம். மேலும் விவசாயிகள் rcs.tn.gov.in இணையதளத்தின் மூலம் 'Coop e-வாடகை' சேவை மூலமும் பதிவு செய்து பயன்படுத்தலாம். இவற்றை குறித்த நேரத்தில் விரைவாகவும் நியாயமான வாடகையிலும் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like