குடிமைப் பணித் தேர்வருக்கு குட் நியூஸ்.. இலவச பயிற்சி பெற அழைக்கிறது அரசு..!

அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மைய இயக்குநரும், தலைமைச் செயலருமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக அரசு சார்பில் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் 225 முழு நேரத் தேர்வர்கள், 100 பகுதி நேரத் தேர்வர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவை மற்ரும் மதுரையில் தலா 100 முழுநேரத் தோ்வா்கள் முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.
விருப்பம் உள்ள தமிழக மாணவர்கள், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணையதளம் வழியாக இன்று (டிச.11ம் தேதி) முதல், வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே முதல்நிலைத் தோ்வுக்கு முழுநேரப் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது கல்வி மற்றும் வயது ஆகிய தகுதி விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்து அறியலாம். தகுதியுடைய நபர்கள் வரும் ஜனவரி 23-ம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.