1. Home
  2. தமிழ்நாடு

கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்..! அடுத்தடுத்து வட்டியைக் குறைக்கும் வங்கிகள்..!

1

பஞ்சாப் நேஷனல் வங்கி சமீபத்தில் வட்டி விகிதங்களைக் குறைப்பதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது மூன்று பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகள் தங்களுடைய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளன. கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதம் (EBLR) மற்றும் ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் (RLLR) ஆகியவற்றை 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த வட்டிக் குறைப்பால் யூனியன் வங்கியில் வீட்டுக் கடன்கள், வாகனக் கடன், தனிநபர் கடன் மற்றும் MSME பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்கு இனி குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தனது RLLR வட்டி விகிதத்தை 8.85 சதவீதத்தில் இருந்து 8.35 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதம் ஜூன் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கனரா வங்கியும் அதன் RLLR வட்டி விகிதத்தை 8.75 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த வட்டி மாற்றமும் ஜூன் 12ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்த பிறகு வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் (CRR) 100 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 3 சதவீதமாக வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் வழங்க வங்கிகளுக்கு கூடுதலாக ரூ. 2.5 லட்சம் கோடி கிடைக்கும். அதாவது, பொதுமக்கள் இதன் மூலம் அதிகளவில் கடன் பெற முடியும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு 5:1 என்ற வாக்கு மூலம் ரெப்போ விகிதத்தை 5.5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்திருந்தது. ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்த பிறகு, பல வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. மற்ற வங்கிகளும் விரைவில் இந்த முடிவை எடுக்கலாம். வட்டி விகிதங்களைக் குறைப்பதன் காரணமாக கடன் வாங்குவது இனி எளிதாக இருக்கும்.

முன்னதாக, ICICI வங்கி மற்றும் HDFC வங்கி தங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதங்களைக் குறைத்தன. இது ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்கள் மத்தில் கவலையை ஏற்படுத்தியது. இதுபோன்ற சூழலில், தற்போது சில வங்கிகள் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபக்கம் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியைக் குறைப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

Trending News

Latest News

You May Like