குட்நியூஸ்.. நீண்ட நாள் பிரச்சனைக்கு வந்த தீர்வு!

வருகை பதிவு, தேர்ச்சி விவரங்கள் உள்பட பல்வேறு விவரங்களை ஆசிரியர்கள் தான் எமிஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்த ‘எமிஸ்’ தளப் பதிவுச் சுமை குறைக்கப்படுவதாகவும், அது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகப் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து விவரங்களும் கல்வி மேலாண்மை தகவல் மையம் என்று கூறப்படும் “எமிஸ்” தளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தளத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தினமும் அதிகளவிலான தகவல்களை மாணவர்களிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தப் பணிகள் காரணமாக ஆசிரியர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
மேலும் இந்தச் சுமையைக் குறைக்கச் சொல்லிக் கல்வித் துறையிடமும் முறையிட்டு வந்தார்கள். ஒரு கட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமே ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டன.
இதையடுத்து அவரும் இதற்குத் தீர்வுக்காணப்படும் என்று கூறியதுடன், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், “கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் (EMIS) தற்போதைய தரவுப் பதிவு செய்வதையும், மதிப்பிடுவதற்கும், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பணியினைக் குறைக்கும் நோக்கில் தீர்வுகளை முன்மொழிவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குழு தற்போதுள்ள தரவுப் பதிவு நடைமுறைகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றினை முழுமையான சீராய்வுக்குப் பிறகு EMIS-இல் தரவுகளைப் பதிவு செய்யும் பணியினை எளிதாக்கவும், நெறிப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.
பள்ளிகள் அளவில் விபரங்களைப் பதிவு செய்யும் பணியினை கணிசமாகக் குறைத்தும் அதே வேளையில் அத்தியாவசியமான விவரங்கள் மட்டுமே பராமரிக்கும் வகையிலும், தரவு பதிவுச் செய்யும் பணிகள் குறைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால், ஆசிரியர்களுக்குப் பெரும் சுமையாக இருந்த எமிஸ் தளத்தில் விவரங்களைப் பதிவு செய்யும் சுமை குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் “அடல்”ஆய்வக தொகுதி பதிவு எமிஸ் தளப்பதிவிலிருந்து அகற்றப்படுகிறது. மேலும் நிதி, நிறுவனம், பள்ளி நன்கொடை, தகவல் தொடர்பு, மனுக்கள், செயல்முறை, உதவித்தொகை, மாணவர் ஊக்கம், ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள், பள்ளிகளுக்கான மின் கட்டண விவரங்கள் சார்ந்த பதிவுகளும் நீக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாசிப்பு இயக்கம், கலைத் திருவிழா, விலையில்லா பாடப்பொருட்கள் மற்றும் பாடப்புத்தகங்கள், பள்ளி சார்ந்த விவரங்கள் உள்ளிட்ட சில விவரங்களைப் பதிவு செய்வதிலும் பணிகள் சற்று குறைக்கப்பட்டிருக்கிறது.
இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது., இந்த நடவடிக்கைகள் வாயிலாகத் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நிர்வாகத் தரவு உள்ளீடு சார்ந்த பணிச் சுமையைக் கணிசமாகக் குறைத்து, கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த ஏதுவாக அமையும் என்று பள்ளி கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.