குட் நியூஸ்..! ஏற்காடு மலர் கண்காட்சி நீட்டிப்பு..!
ஏற்காட்டில் 47வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலா்த் தொட்டிகளைக் கொண்டு மலா் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அண்ணா பூங்காவில், காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏற்காட்டில் விளையும் காஃபி ரகங்களை தேவைக்கேற்ப சுவைத்து, அவற்றை வாங்கிச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மலர்க் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகம் போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக நல்ல மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது. இதனால் ஏற்காட்டில் குளிர் அதிகமாக காணப்படுகிறது.
தற்போது கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால் இந்தக் கால சூழ்நிலையில் இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் காட்டெருமைகள் சாலையின் ஓரத்தில் மேய்ந்து வருவதால் மலைப்பாதையில் வரும் சுற்றுலா பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமுடன் வருமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவுபெற இருந்த நிலையில் மே 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்று தோட்டக்கலை துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.