குட் நியூஸ்..! போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்
கடலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- போக்குவரத்து துறையில் கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போதைய முதல்வர் தான் ஒவ்வொன்றாக தீர்வு கொடுத்து வருகிறார். புதிய பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 4,800 புதிய பஸ்கள் வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மேலும் போக்குவரத்து துறையில் 680 புதிய பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர டிரைவர், கண்டக்டர்கள் என 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் போக்குவரத்து துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் பாக்கி இருந்த தொகையும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.