குட் நியூஸ்..! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாதிக்காமல் இருக்க காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து 15 நாட்களுக்கு தொடர்ந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 29-ம் தேதி முதல் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதை எதிர்த்து கர்நாடகா மாநிலம் மண்டியா பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும்தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மண்டியாவில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
கர்நாடகாவில் தண்ணீர் குறைக்கப்பட்டதால் தமிழகத்துக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
நேற்று காலை 8 மணி நிலரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 550 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருகிறது.