குட் நியூஸ்..! விரைவில் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினைத் (Literacy Intervention centre) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். மேலும், அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 16 அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்களையும் (STEM & SILC) திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:-
கேரளத்தில் அமலில் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல் திட்டம்’ அரசுப் பள்ளிகளில் விரைவில் செயல்படுத்தப்படும். ’வாட்டர் பெல்’ திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்,” என்றார்.
இதனிடையே அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இருந்த 3 உருது கல்விச் சரகங்கள் கலைக்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையினர் நலன்காக்கும் திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு உருது ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று 3 உருது சரகங்களுக்குப் பதிலாக 6 உருது சரகங்களை அமைத்தார் முதலமைச்சர் அவர்கள். இதற்காக ஓசூரில் தமிழ்நாடு உருது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தோம்” என்று கூறியுள்ளார்.